Friday 13 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் கதையே இல்லை என்று தயாரிப்பாளரும், பட கதாநாயகனுமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்.


சினிமாவில் நடித்திருப்பது குறித்து அவர் கூறுகையில், நடிக்க வேண்டும் என்ற பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் நீங்களே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தால் என்ன? என்று கேட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மவுனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.

வேள்வி, தவம் எதுவும் இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன், ஆனால் இது பெரிய இடம். இதை தக்க வைத்துக்கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என நினைத்தபோது டைரக்டர் பாண்டிராஜ் என்னிடம் 'வம்சம்' படத்தின் கதையை சொன்னார்.

'பருத்தி வீரன்' படத்தின் பாதிப்பு அதில் இருந்தது. அது மாதிரியான ஒரு கதை என் உடல்வாகுக்கு சரியாக வருமா? என்ற கேள்வி எனக்குள் வந்தது. அப்போது கதாநாயகனாகும் எண்ணத்தில் இருந்த அருள்நிதியிடம் பாண்டிராஜை அனுப்பி வைத்தேன். அந்த கதை அவனுக்குப் பிடித்திருந்தது.
அப்போதுதான் டைரக்டர் ராஜேஷ் ஒரு ஒன் லைன் கதை சொன்னார். சுத்தமாக புரியவில்லை அவர் மூன்று மணி நேரம் கதை சொல்லியிருந்தாலும் நிச்சயம் எனக்கு அது புரிந்திருக்காது.
ஏனென்றால் அதில் கதையே இல்லை. அப்படி ஒரு கதைதான் எனக்கு தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் ராஜேஷின், 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்கள் எனக்கு பிடிக்கும். அந்த சாயலிலேயே இதுவும் இருந்ததால் நடிக்க வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment